இந்திய படகுகளை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சருக்கு மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாணம்,ஜுன் 14

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மகஜரொன்றை கையளிக்க வடக்கு கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர்  இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும்  தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப் படகுகளை தடுக்ககோரி நாம் மிகப்பெரிய போராட்டங்களை செய்ததுடன் மகஜர்களை அனுப்பியும் வடக்கு கடற்றொழில் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.தீர்வு கிடைக்காத காரணத்தினால் நாங்கள் தொடர்ந்து தீர்வு கிடைக்கும் வரை எங்கள் இறையாண்மையை பாதுகாப்பதற்கு பொருளாதார நெருக்கடியை தாண்டி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம் என்பதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மக்களுக்கான உரிமைக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களுக்கும் தமிழகம் கட்சித் தலைவர்களுக்கும் இந்த நேரத்திலே தயவாக தெரிவிக்க விரும்புகிறோம்.

விசைப்படகுகளை எமது கடல் எல்லைக்குள் வராது தடுத்து நிறுத்தி எம்மை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற செய்தியை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அனைவரிடமும் விடுக்கின்றோம். தமிழகத்தில் காணப்பட்ட மீன்பிடி தடை காலம் முடிவடையவுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் இலங்கை பகுதிக்குள் அத்துமீறலாம் என்பதால் அதனை கட்டுப்படுத்த கோரியே தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்க்கும் ஒரு கடிதத்தை நாளைய தினம் அனுப்ப உள்ளோம் என்றார்.

மேலும், இழுவைமடிப் படகுகள் எமது கடலுக்குள் வந்தால் நாம் மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாம் மீன்பிடி உபகரணங்களை வடக்கில் பெறுவது மிகவும் அரிதானது. அது கிடைத்தாலும் அதிக விலைக்கே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *