
வத்தளை-மஹாபாகே, கல் உடுப்பிட்ட பிரதேசத்தில் சொத்துக்காக மாமியாரை மருமகன் கொன்ற கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி மஹாபாகே, கல் உடுப்பிட்ட பிரதேசத்தில் உள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பொருள்களைத் திருடி குறித்த பெண்ணைக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
எனினும் உயிரிழந்த பெண்ணின் மருமகனின் நடத்தை மற்றும் நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கமைய அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே சொத்துக்களை சொந்தமாக்குவதற்கு மாமியாரைக் கொலை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 40 கோடி ரூபாவுக்கான நிலையான வைப்புச் சான்றிதழ், காணி உறுதிப் பத்திரங்கள், உயிரிழந்த பெண்ணின் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட ஆவணங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் ராகம பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதாலே பெண் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தேக நபர் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மஹரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.