196 ஏக்கர் கரும்பு தோட்டக் காணி: மக்களிடம் கையளிக்க நடவடிக்கை

196 ஏக்கர் கரும்பு தோட்டக் காணி காலபோக பயன்பாட்டுக்கு மக்களிடம் கையளிக்க நடவடிக்கை ஆரம்பமாகியது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள கரும்பு தோட்ட காணியானது அரச காணியாக பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த காணியை 2018ம் ஆண்டு முதல் வடக்கில் பிரபல அரச அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதேச மக்களின் முயற்சியால் குறித்த காணியை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் ருசாங்கன் தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர், நில அளவையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு காணியை கையளித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவிக்கையில்,

196 ஏக்கர் அரச காணி மக்கள் பயன்பாட்டிற்கு இன்று கையளிக்கப்படுகின்றது. குறித்த காணியினை பகிர்ந்தளிக்க 196 பயனாளிகள் 12 கிராமமட்ட அமைப்புக்களினால் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு கிராமசேவையாளரின் சிபாரிசுடன் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபரம் கமநல சேவைகள் திணைக்களத்திடம் உறுதிப்படுத்தவிற்காக கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மக்களிடம் கையளிக்கப்படும். அத்துடன் குறித்த காணியில் ஏறத்தாள 150 ஏக்கர் மாத்திரமே வயல்காணியாகும். ஏனையவை மேட்டுநிலமாகும். அதற்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த காணியில் கரும்பு செய்கையே மேற்கொள்ளப்படும். அதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குறித்த காணிகளை மக்கள் பயன்படுத்தி செய்கை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த கிராமமட்ட அமைப்பின் பிரதிநிதி சாம் குறிப்பிடுகையில்,

இந்த காணியை 2018ம் ஆண்டு ஒருசிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். அதற்கு அப்போதைய முதலமைச்சரும் உடந்தையாக இருந்தார்.

காணியை துப்பரவு செய்து செய்கை மேற்கொள்ள நாம் முயற்சி எடுத்தபோது பொலிசாரால் நடவடிக்கை எடுத்தனர். இவ்வாரான நிலையில் நாம் எடுத்த முயற்சியால் இன்று எமக்கு நன்மை கிடைத்துள்ளது. கரும்பு செய்கை மேற்கொள்ளும் வரை நாம் காலபோகத்தை மேற்கொள்வோம். அதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply