சமயல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பொருட்களில் விலை அதிகரிப்பு காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல உணவகங்கள் மூடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் தொடர்ச்சியாக எரிபொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தற்போது சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது.
இதனால், புத்தளம், பாலாவி, மதுரங்குளி மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பல உணவகங்களும், வீதியோர சிற்றுண்டிச் சாலைகளும் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டுள்ளன.
அதுமாத்திரமின்றி, நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பல உணவகங்களின் உரிமையாளர்கள் தமது உணவகங்களில் உள்ள பொருட்களை விற்பனை செய்து விட்டு வெளிநாடு செல்லும் நிலையும் காணப்படுகிறது.

இதனால், மேற்படி உணவகங்களில் பணிபுரிந்த பல தொழிலாளர்கள் தற்போது தொழில் இன்றி தாமது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்னும், சில உணவகங்களில் வியாபாரம் மந்தகதியில் காணப்படுவதனால், அங்கு கடமைபுரியும் மேலதிக தொழிலாளர்களை பணியிலிருந்து நிறுத்துவதற்கும் உணவங்களின் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் சில உணவகங்களின் உரிமையாளர்கள் முன்னர் வழங்கிய சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே வழங்கி வருவதாகவும் உணவக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சில உணவகங்கள் மண்ணெண்ணையில் தயாரிக்கப்பட்ட அடுப்புகள் மற்றும் விறகுகளைக் கொண்டு உணவுகளை தயாரிக்கின்ற போதிலும் மக்கள் ஹோட்டல் சாப்பாடுகளை கொள்வனவு செய்வதில் ஆர்வமின்றி காணப்படுவதாகவும் இதனால், நாளாந்தம் உணவுப் பொருட்கள் மிச்சப்படுவதாவும் உணவகங்களின் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடன்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்து, இவ்வாறு உணவகங்களை நடாத்திச் செல்லுகின்ற போது இவ்வாறு வியாபாரம் மந்தகதியில் காணப்படுவதால் தாங்கள் மேலும் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருவதாகவும் உணவகங்களின் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிற செய்திகள்