கழுகுப் பார்வைக்குள் சிக்கிய தமிழர் பகுதி; காற்றிலும் அரசியல் செய்ய முனையும் இந்தியா!

அண்மை நாட்களில் இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி, மாற்றுச் சக்தி, மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிநிலையால் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தடையைத் தனிப்பதற்குப் இத்தகைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. இத்தகைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளுல் அதிகம் கவனத்தை ஈர்த்திருப்பவை காற்றாலைகள் ஆகும்.

சுழலும் காற்றினால் உருவாக்கப்படும் அசைவியக்க சக்தியினைக் கொண்டு மின்சாரத்தினை உற்பத்தி செய்யக் காற்று பயன்படுத்தப்படுகின்றது.

காற்றினால் இயங்கும் ‘டேர்பைன்களைப’ பயன்படுத்தி அல்லது காற்றின் சக்தியினைச் சேமித்துப் பாதுகாக்கும் முறைமைகள் மூலம் இது மின்சார சக்தியாக நிலைமாற்றப்படுகின்றது.

முதலில் காற்று ‘டேர்பைனின் தகடுகளை (Plates) தாக்குகின்றது. இதனால் தகடுகள் சுழன்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ‘டேர்பைனை’ சுழற்றுகின்றன.

இது ‘ஜெனரேட்டருடன்’ பொருத்தப்பட்டுள்ள அச்சினை நகர்த்துவதன் மூலம் அசைவியக்க சக்தியினை சுழலும் சக்தியாக மாற்றுகின்றது. பின்னர் மின்காந்தவியல் மூலம் மின்சார சக்தி உருவாக்கப்படுகின்றது.

காற்றினால் இயங்கும் ‘டேர்பைன்கள்’ ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் முதன் முதலில் உருவாக்கப்பட்டன. 1830களில் மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்ய பொறியியலாளர்கள் காற்றின் சக்தியினைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

காற்றின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் நுட்பம் இங்கிலாந்தில் 1887 இலும், அமெரிக்காவில் 1888 இலும் தொடங்கியது.

ஆனால் நவீன காற்றுச் சக்தி டென்மார்க்கிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. கிடையான அச்சில் இயங்கும் காற்று ‘டேர்பைன்கள்’ 1891 இல் உருவாக்கப்பட்டன.

இலங்கையில் 1988 ஆம் ஆண்டிலிருந்து காற்றாலை மின்சாரம் குறித்துப் பேசி வந்தாலும் 2003 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டது.

வட மாகாணத்தில் பளை பிரதேசத்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்து காற்றாலைகளின் மூலமாக மின்சாரத்தினைப் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

பளையில் காற்றாலை அமைக்கப்படும் போது பெரியளவு மக்கள் அதனை எதிர்க்கவில்லை. 2018 ஆம் ஆண்டு யாழ்.நகருக்கு அண்மித்த மறவன்புலவு கடற்கரை பகுதியில் காற்றாலைகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது அதனை அப்பிரதேச மக்கள் எதிர்த்தனர். அதற்கான காரணங்களைப் பின்வருமாறு அப்பகுதி மக்கள் முன்வைத்தனர்.

தம்மிடம் அனுமதி பெறாமலேயே இப்பகுதியில் காற்றாலை அமைக்கப்படுகிறது, தமது காணிகள் பறிபோகப்போகின்றன, சுகாதார பிரச்சினைகள் வரக்கூடும் போன்றவற்றைக் குறிப்பிட்டனர்.

கடற்கரையானது ஆழம் குறைந்த, பாசிகள் – கடற்தாவரங்கள் வளரக்கூடிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது, இதில் மீன் முட்டையிட்டு பெருகக்கூடிய இயற்கையமைப்புகள் காணப்படுகின்றன.

24 மணிநேரமும் இயங்ககூடிய காற்றாலைகள் எழுப்பும் சத்தமும், நீரலைகள் மீது அது ஏற்படுத்தும் அதிர்வும் மீன்கள் கரையை நோக்கி வருவதைத் தடுக்கும்.

இதனால் இப்பகுதியில் மீன்வளம் அற்றுப்போகும். எமது பொருளாதாரம் பாதிக்கப்படும் – போன்ற காரணங்களை இப்பகுதி மீனவர்கள் முன்வைத்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி பூங்கா, 2020 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் ‘தம்பவன்னி’ எனும்பெயரில் திறந்துவைக்கப்பட்டது. இந்த மின் உற்பத்தி பூங்காவிற்கும் மன்னார் மீனவர்கள் தம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

காற்றாலைகளின் சத்தமும், நீரின் மேல் அது எழுப்பும் அதிர்வும் மீன்வளத்தை அழித்துவிடும் என ஐயம் வெளியிட்டனர். மன்னார் காற்றாலை சர்ச்சை அண்மை நாட்களாகத் தெற்கில் ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோக்குவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலைக்கும் இந்த மன்னார் காற்றாலையே காரணமாக இருக்கிறது.

மன்னார் காற்றாலை மின் உற்பத்திப் பூங்காவை அதானி குழுமத்திற்கு வழங்கியமை தொடர்பான விசாரணைக்காக, முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற விசாரணைக் குழுவினர் முன் முன்னிலையாகிய முன்னாள் மின்சார சபைத் தலைவர், இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்திற்கு இணங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மன்னார் காற்றாலை மின் உற்பத்திப் பூங்காவை இந்திய அதானி குழுமத்திற்கு வழங்குமாறு தன்னைப் பணித்தார் – எனத் தெரிவித்திருந்தார்.

இதனை உடனடியாக தனது ருவீற்றர் தளத்தில் மறுத்திருந்த ஜனாதிபதி, “Re a statement made by the #lka CEB Chairman at a COPE committee hearing regarding the award of a Wind Power Project in Mannar, I categorically deny authorisation to award this project to any specific person or entity. I trust responsible communication in this regard will follow.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விசாரணையின் பின்னர் வந்த இரு தினங்களுக்குள் முன்னாள் மின்சார சபைத் தலைவர் ஊடகங்கள் முன்னிலையில் தடுமாறினார். தான் முயற்சியாண்மைக்கான பாராளுன்ற விசாரணைக்குழு முன் கூறியது தவறான தகவல் என்றார். ‘அதானிக்கு மன்னாரில் காற்றாலை மின்திட்டம் வழங்கும்படி மோடி, கோட்டபாயவுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கோப் குழு முன்னிலையில் கூறியது பொய். சற்று உணர்ச்சிவசப்பட்டு அப்படிக் கூறிவிட்டேன்”, “பசிக் களைப்பு மற்றும் மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் அவ்வாறு கூறிவிட்டேன்” – என்றெல்லாம் பிதற்றி, இறுதியில் தன்வசமிருந்த மின்சார சபைத் தலைவர் பதவியையும் ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ ராஜினாமா செய்தார்.

முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றக் குழுவின் பலவீனமே இதுதான். அரச துறையில் ஏற்படுத்தப்படும் எவ்விதமான ஊழலையும் அதனால் விசாரிக்க முடியும். ஆனால் அதனால் தீர்ப்புச் சொல்லவோ, முன் பின் முரணான தகவல்களைக் கூறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது.

அரசியல்வாதிகளும், பலமுள்ள அதிகாரிகளும் மேற்கொள்ளும் ஊழல்களை, அதிகாரத் துஷ்பிரயோகங்களைக் காப்பாற்றும் எல்லை வரைக்குமே அதனால் செயற்பட முடிகிறது. அது மக்கள் முன்னிலையில் பலமுள்ளவர்களை அம்பலப்படுத்தியதும் கிடையாது. இந்த விசாரணையின் போது கூட மன்னார் காற்றாலை பூங்கா எவ்வித கேள்விப்பத்திரங்களுமின்றி அதானி குழுமத்திற்கு எப்படி வழங்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

யானையைப் பிடிக்கப் புறப்பட்டு சுண்டெலியோடு வந்த கதையாக, மின்சார சபைத் தலைவரின் பதவியிழப்போடு மெளனித்திருக்கிறது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற விசாரணைக்குழு.

அதானி குழுமத்தின் இலங்கை வருகை குறித்தும் அவதானிக்கப்படல் வேண்டும். ராஜபக்சக்களின் மீள்வருகையுடனேயே இலங்கை அரசியலில் அதானிகுழுமத்தின் பெயர் அதிகம் அடிபட்டது.

இந்திய அரசியலை மொத்தமாகவும், மாநில அரசியலை சில்லறையாகவும் குத்தகைக்கு எடுத்துவிட்ட தென்னாசியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான அதானி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் சில பகுதிகளை அபிவிருத்திக்காகக் கோரிநின்றது. ஆயினும் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையமே அதானிக்குக் கிடைத்தது.

மறுபுறமாக மன்னாரையும் இந்தியாவையும் இணைக்கும் ராமர் பாலத்தை இந்திய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தொடர்ந்திருக்கிறார்.

இது மன்னாருக்கு மிக அண்மையான கடல் பகுதிகளையும் வளங்களையும் சட்டரீதியாக இந்தியாவோடு சேர்க்கும் முயற்சியாகும். அத்துடன் திருக்கேதீஸ்வர ஆலயத்தை வைத்து இந்து – கிறிஸ்தவ முரண்களுக்கு நன்றாகவே எண்ணெய் வார்க்கப்படுகின்றது.

நீறுபூத்த நெருப்பு நிலையை அடைந்திருக்கும் இவ்விவகாரமானது இன விடுதலை வேண்டி போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் அரசியலையும் மதவாதத்தின் பின்னால் இழுத்துச் செல்லும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *