
கொழும்பு,ஜுன் 15
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகல சர்வதேச மைதானத்தில் நாளை(16) நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விலகியுள்ளார்.
வனிந்து ஹசரங்கவின் உடல்நிலை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மருத்துவ கண்காணிப்பு குழுவின் பிரதானி பேராசிரியர் அர்ஜுன் டி சில்வாவிடம் வினவியபோது, வனிந்துவின் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை தொடர்பில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் அறிக்கைகள் இன்று மாலை கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து தற்போது கூறமுடியாது என்றும் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்தார்.
நேற்றைய போட்டியின்போது வனிந்து, 9 ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சி 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன், துடுப்பாட்டத்தில் 19 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் பலம் வாய்ந்த சுழல் பந்து துருப்புச் சீட்டான வனிந்து ஹசரங்க, எதிர்வரும் போட்டிகளில் நீக்கப்பட்டால் அது இலங்கையின் பந்துவீச்சுக்கு கடுமையான பாதிப்பாக அமையும்.
இதேவேளை, அவுஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் அஸ்டன் அகர் ஆகிய வீரர்கள் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த இருவரும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான எதிர்வரும் ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என அவுஸ்திரேலிய அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.