முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் தொடர்சியாக சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும் கும்பல் மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகளையும் இறச்சிக்காக கடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேவிபுரம் காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் மரங்கள் அறுக்கப்பட்டு குற்றிகளாக ஏற்றப்பட்டு வந்துள்ளமை கிராம மக்களால் இனங்காணப்பட்டுள்ளது.
கிராம அபிவிருத்தி சங்கம், பொலிஸார் மற்றும் கிராம குழுக்கள் அனைவரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அறுக்கப்பட்ட மரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், களவாடப்பட்ட கால்நடைகளில் இரண்டு இறைச்சிக்காக விற்பனைக்கு தயாரான நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
தேவிபுரம் பகுதியில் மக்களின் கோழிகள் அண்மைகாலமாக களவாடப்பட்டு வந்துள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளார்கள்.
இவ்வாறு மக்களின் கோழிகள் களவாடப்பட்டு சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட கும்பல் ஒன்று சமைத்து உண்ணும் இடம் ஒன்றும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மரம் அறுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் மக்களின் கோழிகள் கால்நடைகளை களவாடி இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளமை இதன்போது இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மரம் அறுக்கும் குழுவுடன் இணைந்து கால்நடையினை களவாடிய சந்தேகத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத செயற்பாட்டில் ஈபட்ட நால்வரையும் சான்றுப்பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.


பிற செய்திகள்