
இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்கிய 400 மில்லியன் டொலர் கடனில் ஒரு சதம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்ததாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த நிதி முதலீட்டு செலவுகளுக்காக வழங்கப்பட்டிருந்ததுடன் இதனால், எரிபொருள் கொள்வனவு போன்ற செலவுகளுக்கு அந்த கடனை பயன்படுத்த முடியாது எனவும் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அந்த கடன் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது அது தொடர்பாக தேடி அறிந்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த கடன் உதவியை 500 மில்லியன் டொலர் வரை அதிகரித்து எரிபொருள் நெருக்கடியை ஒத்தி வைத்ததாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
ஒன்பது மாதங்களுக்கு முன்னர் எனது இந்திய நண்பர் ஒருவரும் நானும் விருந்து ஒன்றில் கலந்துக்கொண்டோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர், இந்தியாவுக்கு சென்ற நேரத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 400 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாகவும் அதில் ஒரு சதம் கூட இதுவரை செலவிடப்படவில்லை என்பதால், இந்திய அதிருப்தியில் இருப்பதாக அந்த நண்பர் என்னிடம் கூறினார்.
நான் உடனடியாக இந்திய தூதரகத்தின் திட்டப் பிரிவின் தலைமை அதிகாரி மருத்துவர் ராகேஷ் பாண்டேவை தொடர்புக்கொண்டு இப்படி ஒன்று இருக்கின்றதா எனக் கேட்டேன்.
ஆம் என அவர் பதிலளித்தார். தற்போதும் இருக்கின்றதா எனக் கேட்டேன். ஆம் இருக்கின்றது அந்த பணம் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறினார்.
எரிபொருளை கொள்வனவு செய்ய இதனை வழங்க முடியுமா என கேட்ட போது இந்தியா முடியாது என்றது.
இந்தியா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடல்ல. நாங்கள் இதனை முதலீட்டு செலவுகளுக்காக வழங்கியுள்ளோம். எரிபொருளுக்கு வழங்குவது என்பது அன்றாட செலவுகளுக்கு வழங்குவது போன்ற விடயம். அது இரண்டு விதமான கடன்.
நான் கைவிடவில்லை தொடர்ந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன் பிரதிபலனாக 400 மில்லியன் டொலர் 500 மில்லியன் டொலர்களாக மாறியது.
இதன் காரணமாக நீண்டகாலத்திற்கு முன்னமே ஏற்படவிருந்த எரிபொருள் நெருக்கடியை ஒத்திவைக்க முடிந்தது எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
பிற செய்திகள்