
பாகிஸ்தான்,ஜுன் 15
கடன் சுமையை குறைக்க டீ குடிப்பதை குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் திட்ட அமைச்சர்அஷன் இக்பால், கடன் மூலமாகத்தான் டீ இறக்குமதி செய்யப்படுவதாகவும், எனவே, கடன் சுமையைக் குறைக்க நாட்டு மக்கள் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் டீ குடிக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 2020-21 நிதி ஆண்டில் 7 ஆயிரத்து 82 கோடி ரூபாயாக இருந்த டீ இறக்குமதி தொகை, 2021-22 நிதி ஆண்டில் 8 ஆயிரத்து 388 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, பாகிஸ்தானின் கடன் சுமையை அதிகரித்திருப்பதால், இந்த வேண்டுகோளை அமைச்சர் முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வணிகர்கள் தங்கள் சேவையை இரவு 8.30 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அஷான் இக்பால் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். இதன் மூலம், பெட்ரோலிய இறக்குமதியை குறைக்க முடியும் என்றும் அவர் கூறி இருந்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டின் அந்நிய செலவானி கையிறுப்பும் வேகமாக சரிந்து வருவதால், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இலங்கைக்கு ஏற்பட்ட நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுவிடும் என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.