இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை மீட்கும் பொருத்தமான வழிமுறைகள் பற்றி ஆராய இளையவர்களின் தலைமைத்துவம் கொண்ட புலம் பெயர் தமிழர் கூட்டணி பிரித்தானியாவில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது.
இக் கூட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் அரசியல் பற்றி சிறப்பு பேச்சாளராக குணா கவியழகன் உரையாற்றினார்.
அதனையடுத்து சசி, சங்கீத், காயத்திரி, வேந்தன், ராகேஷ் மற்றும் கௌரிபரா ஆகியோர் கூட்டத்தில் விளக்கமளித்தனர்.
குறித்த கூட்டத்தில் Zoom வழியாகவும் பல நாடுகளில் பலர் இருந்து கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்து கடந்த வருடத்திலிருந்து தாம் பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்த உற்பத்தி நடவடிக்கை முறைமைகள் பற்றி எடுத்துரைத்தனர்.
கற்றுக் கொண்ட பாடத்திலிருந்து தாயகத்திற்கு பொருத்தமாக தாம் உருவாக்கிய முறைமை பற்றி விளக்கமளித்தனர்.
உற்பதிக்குழுக்கள், நுண் சமூகம், கூட்டு மூலதன உருவாக்கம், சமூக மூலதனத் திட்டம், சமூக நிறுவன வடிவம் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது.

இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கட்டமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டது.
இவை தமது பரீட்சார்த்த முறைகளிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை இணைத்து எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் விளக்கினர்.
மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து இக்கட்டமைப்பு இயங்கவைக்கப்படுகின்ற போதும் ஏனைய உற்பதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்றும் தம் அமைப்பு புலம் பெயர் தேசத்திலும் தாயகத்திலும் முன்னெடுக்கும் பல்வேறு வகையான செயல் திட்டங்களையும் முன்வைத்தனர்.

தம்மோடு இணைந்து இந்த பொருளாதார மீட்சிக்கு பயணிக்க விரும்பும் அமைப்புகள் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, ஏற்கனவே 36 அமைப்புகள் தங்களோடு பல்வேறு பணிகளில் இருப்பதாக தெரிவித்தனர்.

பிற செய்திகள்