உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்ட ஆரம்பம்!( படங்கள் இணைப்பு)

வாழைச்சேனை பிரதேச சபைக்கான கனேடிய உதவியின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளுர் பெண் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதன் ஊடாக உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப வைபவம் பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் பணிப்பாளர் சபையின் உப தலைவரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஸாத், உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகர, உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் பெருமாள் பிரதீப், சபையின் பிரதி தவிசாளர் எஸ்.யசோதரன், சபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர் எஸ்.நவநீதன், சபையின் சனசமூக உத்தியோகத்தர் எம்.ஹாரூன், சபையின் உத்தியோகத்தர்கள், சனசமூக அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் மற்றும் கனேடிய மாநகராட்சி சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் கனேடிய நிதி உதவியின் கீழ் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் உள்ளுர் ஆளுகைக்கு தலைமை ஏற்கக்கூடிய வகையில் பெண்களை வலுவூட்டுவதற்காக அமுல்படுத்தவென திட்டமிடப்பட்டுள்ள ஆறு வருட செயற்றிட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த திட்டங்களை செயற்படுத்தும் வகையில் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் செயற்குழு உருவாக்கம் செய்யப்பட்டதுடன், வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகர ஆகியோரால் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஆறு வருட செயற்றிட்டத்தின் கீழ் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட வாழைச்சேனை பிரதேச சபைக்கு பகுதி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள கனேடிய நிதியான முப்பதாயிரம் டொலரான இலங்கை ரூபாவாக எண்பத்தையாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் பெருமாள் பிரதீப் தெரிவித்தார்.

அகில இலங்கை ரீதியாக ஐம்பத்தேழு சபைகள் விண்ணப்பித்த நிலையில் ஐந்து சபைகள் தெரிவு செய்யப்பட்டது. அதில் வாழைச்சேனை பிரதேச சபை, கம்பளை நகர சபை, ரத்னபுரி மாநகர சபைஈ மஸ்ஹெலிய பிரதேச சபை, நாத்தாண்டிய பிரதேச சபை ஆகிய சபைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *