
கொழும்பு,ஜுன் 16
இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிதியை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்காக ஒதுக்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அரிசி தட்டுப்பாடு மற்றும் அசாதாரண விலை உயர்வை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தமது அரசாங்கம் பூணை ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் Jeong Woonjin தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்குமாறும், கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு தொழில்முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு அவசர நிதியுதவியொன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதற்கமைய 6 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவியொன்றை வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள விளிம்புநிலை சமூகங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

