
கொழும்பு,ஜுன் 16
எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் ஊடாக 40 ஆயிரம் மெற்றிக் டொன் டீசல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடன் திட்டத்திற்கு அமைவாக நாட்டை வந்தடைந்துள்ள இறுதி டீசல் கப்பல் இதுவாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
உரிய விபரங்களை பெற்றுக்கொண்டு மக்கள் எரிபொருள் கொள்வனவில் ஈடுபடுமாறு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விநியோகத்தில் உள்ளடக்கப்படாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பதன் ஊடாக பயனில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
மன்னார் நகரத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்று வருகின்றனர்.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த பிரதேசத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மூன்று நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அனுராதபுர வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
இந் நிலையில், அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைப் பணியாளர்கள் எரிபொருள் இன்மையினால் வைத்தியசாலைக்கு வருகை தராத நிலையிலேயே, இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் அஜந்த ராஜகருணா தெரிவித்துள்ளார். இதேவேளை, அனுராதபுரத்தில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு சொந்தமானது என குறிப்பிட்டு, மோட்டார் சைக்கிலொன்றுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ள முற்பட்ட போதே, அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. வரிசையில் நிற்காது, எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முயன்றபோதே, அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுமையாக முடங்கும் அபாயம் காணப்படுவதாக கல்விசாரா சேவை சங்கம் அறிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, குறித்த சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன இதனைக் குறிப்பிட்டார் எரிபொருள் கையிருப்பு குறைவாகவே காணப்படுவதாகவும், இதனால் அரச சேவையாளர்களுக்கு, கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், கூடிய விரைவில் நாடு முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்
நாட்டை முடக்குவதாக அரசாங்கம் அறிவிக்காவிட்டாலும், தன்னிச்சையாகவே நாடு முடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சியாளர்களின் முறையற்ற தீர்மானங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, கல்விசாரா சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின், ஒரு மின் பிறப்பாக்கி கட்டமைப்பு எதிர்வரும் சனிக்கிழமை முதல் மூடப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.