களனி ஆற்றில் குழந்தையை வீசிய தாய்; மகன் வழங்கியுள்ள அதிர்ச்சி வாக்குமூலம்!

வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது குழந்தையை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது ஐந்து வயது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரைத் துறக்க முயன்ற தாய் தொடர்பில் அவரது மூத்த மகன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மகன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாற்றுத்திறனாளியான எனது அம்மா ஊன்றுகோல் உதவியுடன், வெள்ளை நிற துணியுடன் தம்பியை அழைத்துக்கொண்டு நேற்று மாலை சென்றார். நான் எங்கே செல்கின்றீர்கள் என வினவியபோது என்னை முறைத்துவிட்டு தம்பியுடன் சென்றுவிட்டார்.

அம்மாவுக்கு வலிப்பு நோய் உள்ளது. என்னையும் அழைத்தார். நான் தயாராகி வந்து நானும் வருகிறேன் என கூறினேன். பின்னர் வர வேண்டாம் என கூறிவிட்டார்.

அம்மா என்னை விட தம்பி மீது அதிகமாக பாசம் காட்டுவார். சிறு வயதில் பெனடோல் கொடுத்து என்னையும் கொல்ல பார்த்தார். அதனால் எனது சித்தி தான் என்னை பார்த்துக் கொண்டார். தம்பி மீது அதிக பாசம் வைத்துள்ளார். ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த தாய் தொடர்பில் அவரது சகோதரி தெரிவிக்கையில், எனது சகோதரி கணவரை விட்டு பிரிந்ததிலிருந்து மனவிரக்தியில் காணப்பட்டார்.எப்பொழுதும் கோபமாகவே நடந்துக்கொள்வார்.அவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட பெண் குழந்தையை களனி ஆற்றில் வீசி தானும் கங்கையில் குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, ​​அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *