
யாழ், ஜுன் 17
குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு நகர்சேர் கடுகதி ரயில் ஒன்று இன்று முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சேவையில் ஈடுபடவுள்ளது.
10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், 520 ஆசனங்கள் உள்ளதாக ரயில் திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இரவு 10 மணிக்கு புறப்படும் குறித்த ரயில், அடுத்தநாள் அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்து, 5.30க்கு புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடையும்.
பின்னர் அந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு கல்கிஸையை சென்றடையும்.
குறித்த ரயில் பயணக் கட்டணம் 2,800 ரூபாவாகும் என யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ஆசன முன்பதிவுகளை, யாழ்ப்பாண ரயில் நிலையத்திலும், ஏனைய ஆசன முன்பதிவுகள் செய்யக்கூடிய ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.