7 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழுவின் முன்னிலையில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 7 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருப்பதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளில் லிபரல் கட்சி, அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சிங்க தேசிய முன்னணி மற்றும் சமத்துவக் கட்சி ஆகியன தமது பங்களிப்பை உறுதிப்படுத்தியிருப்பதாக ரோஹனதீர தெரிவித்தார்.

மௌபிம ஜனதா கட்சி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகியவை இதுவரை தமது பங்களிப்பை உறுதிப்படுத்தவில்லை.

கடந்த 14 ஆம் திகதி விசேட பாராளுமன்றக் குழு கூடியபோது தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பஃவ்ரல் அமைப்பு தமது யோசனைகளை முன்வைத்திருந்தது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கான விசேட பாராளுமன்றக் குழு கடந்த ஏப்ரல் மாதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்டது.

இக்குழு மே மாதம் 17 ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியிருந்தது.

இந்த பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்களான நிமல் சிறிபால த சில்வா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பவித்ராதேவி வன்னிஆரச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவங்ச, எம். யூ. எம். அலி சப்ரி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர திசாநாயக்க, கபீர் ஹஷீம், ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *