சிலருக்கு கிடைத்தது; பலருக்கு ஏமாற்றம்! பொலிஸாருடன் முரண்பட்ட மக்கள் (படங்கள் இணைப்பு)

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு பெற்றோல் விநியோகிக்கும் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

புத்தளம் – தில்லையடி, புளிச்சாக்குளம் மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நாட்களாக பெற்றோல் விநியோகிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தில்லையடி மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் நேற்று இரவு பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டது.

இதன்போது, மதுரங்குளியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெற்றோல் கொள்வனவுக்காக நீண்ட வரிசை காணப்பட்டதுடன், வரிசையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

வரிசையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன், வரிசையில் காத்து நின்ற பொதுமக்கள் முரண்பட்டனர்.

இதனால் சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டதுடன், கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

எனினும் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் அங்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சில மணி நேரத்தின் பின்னர், பெற்றோல் வழமை போல விநியோகம் செய்யப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலைப் பெறுவதற்காக முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதனால் சிலருக்கு பெற்றோல் கிடைத்தாலும், பலருக்கு பெற்றோல் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கும் நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மாத்திரமே எரிபொருளை வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு லோட் எரிபொருள் என்பது 6,600 லீற்றர்களாகும். முன்னர் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விநியோக கட்டுப்பாட்டிற்கு அமைய ஒரு லோட் மூலம் 220 வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருளை பெற்றுக் கொடுக்க முடியும்.

எனினும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன.

எரிபொருள் கிடைக்காததற்கு எரிபொருள் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காரணமல்ல என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *