அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் – ரயில்கள் தீக்கிரை!

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் இராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் மூன்றாவது நாளாக நடந்த போராட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் சுமார் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ரயில்களுக்கு தீ வைப்பு மற்றும் ரயில் நிலையங்களில் கல்வீச்சு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

முப்படைகளின் தலைமைத் தளபதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் இராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞா்கள் கடந்த புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்றும் (வெள்ளிக்கிழமை) அவா்களின் போராட்டம் தொடர்கிறது.

இதனால், 35 ரயில்களின் சேவை முழுமையாகவும் 13 ரயில்களின் சேவை பகுதியாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே பிகாரில் பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *