
“அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரிய, அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நேற்று பிரதமர் தலைமையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் தோல்வியடைந்துள்ளது.
ஆகவே தீர்வு கிடைக்கும் வரை ஆசிரியர்கள் இணைய வழி கற்பித்தல் நடவடிக்கையினை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்வார்கள்.
எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணதர செயன்முறை பரீட்சை தொடர்பான நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் இணைந்துக் கொள்ளமாட்டார்கள்.
புதிய அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்” என இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உபகுழு அமைச்சரவை கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டது. இக்குழுவினருக்கும் , ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான காமினி லொகுகே, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ரமேஷ் பதிரன, லசந்த அழகியவன்ன ஆகியோரும், இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்க பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டார்கள்.
“ஆசிரிய சேவையில் காணப்படும் சம்பள பிரச்சினைக்கு உறுதியான தீர்வு வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்கள் இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து இடை விலகினார்கள். எமது கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இப்பிரச்சினைக்களுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சர் நேற்று முன்தினம் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனையை அடிப்படையாகக் கொண்டு உரிய தீர்வு அமைச்சரவை மட்டத்திலும் எடுக்கப்படவில்லை. பிரதமர் தலைமையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் அடிப்படை காரணிகளை சுட்டிக்காட்டியுள்ளோம்.
பிரதமர் தலைமையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிப் பெறவில்லை. ஆகவே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடரும். எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஒரு அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தீர்வு கிடைக்கும் வரை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடமாட்டார்கள்.
எதிர்வரும் மாதம் இடம் பெறவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணதர செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் இணைந்துக் கொள்ளமாட்டார்கள்” என்றார்.
வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கத்தினர் கடந்த 12 ஆம் திகதி இணைய வழி கற்பித்தலில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிச கட்சி, பலவந்தமான அடக்குமுறைகளுக்கு எதிரான தேசிய அமைப்பு, இலவச கல்வியை பாதுகாக்கும் தேசிய அமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்கள், மத அமைப்புக்கள் ஒன்றிணைந்த இலங்கை ஆசிரிய மற்றும் அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
ஆசிரிய தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீறிஷிற்கும், ஆசிரிய மற்றும் அதிபர் தொழிற்சங்கத்தினரது பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 20 ஆம் திகதி கல்வியமைச்சில் இடம்பெற்றது.