புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி: சென்னை தோல்வி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

டுபாயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக அம்பத்தி ராயுடு 55 ஓட்டங்களையும் உத்தப்பா 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் நோட்ஜே, அவிஷ்கான் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 137 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் டெல்லி அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷிகர் தவான் 39 ஓட்டங்களையும் சிம்ரொன் ஹெட்மியர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை அணியின் பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டெல்லி அணியின் அக்ஸர் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply