ஷாஹீன் புயலின் கடுமையான தாக்கத்தினால் ஈரான்- ஓமனில் 13பேர் உயிரிழப்பு!

வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன், பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் ஈரான் மற்றும் ஓமனில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓமனின் வடக்குக் கடற் கரையோர பகுதிகளில் 150 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசியதால் பெய்த கடும் மழையால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில், வடக்கில் உள்ள அல் படினா மாகாணத்தில் 7 பேர் உயிரிழந்ததாக ஓமன் அதிகாரிகள் தெரிவித்தனர். நீரில் மூழ்கியோ, நிலச்சரிவினாலோ மேலும் 4பேர் இறந்தனர்.

இதேவேளை இரண்டு மீனவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு மாகாணமான சிஸ்டான் – பலுசெஸ்தானில் இருந்து சென்ற மேலும் 3 மீனவர்களைக் காணவில்லை. இந்தப் பகுதி பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது.

இந்தப் புயல் தென் மேற்கு திசையில் நகர்ந்து நிலப்பகுதியில் நுழைந்து பலவீனமடைந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிக அவசரத் தேவை இருந்தால் ஒழிய, அல் அவின் நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மஸ்கட் நகரில் 200 மி.மீ. மழை பதிவானது என்றும், அங்கிருந்து வட மேற்கு திசையில் உள்ள அல் கொபூரா என்ற இடத்தில் 369 மி.மீ. மழை பதிவானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் புயலால் கடற்கரையில் 10 மீட்டர் அதாவது 32 அடி உயரம் வரையில் அலைகள் எழுந்தன.

Leave a Reply