பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைய இராணுவ அரண்கள் அமைக்க நடவடிக்கை

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட, அக்கராஜன் குளம் கண்ணகிபுரம் கிராமத்தில், ஆற்றுப்படுக்கை எனும் இடத்தில், நீண்ட காலமாக மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

குறித்த இடங்களை ஆனைவிழுந்தான் படை முகமைச் சேர்ந்த இராணுவத்தினர், கிராம மக்களுடன் சென்று இன்று (28) பார்வையிட்டனர்.

சட்டவிரோத மண் அகழ்வு, நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக, பிரதேச மக்கள் முறையிட்டிருந்தனர்.

அதனையடுத்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், நேரடியாக சென்று பார்வையிட்டு, குறித்த பகுதியில், மண் அகழ்வு செய்ய வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

அதன் பின்னரும், தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம்பெற்று வருதையடுத்து, கிராம மக்கள், இயற்கை வளங்கள் அழிந்து வருவதாகவும், மண் அகழ்வினால், கிராமங்களுக்குள் வெள்ளம் உட்புகும் எனவும், கவலை வெளியிட்டனர்.

இந்த விடயம் தொடர்பில், மீண்டும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த போதும், எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத பட்சத்தில், ஆனை விழுந்தான் இராணுவத்தினருக்கு, மக்கள், கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர்.

அதனால், குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறும் இடங்களை பார்வையிட்டதுடன், குறித்த பகுதியில், இராணுவ அரண்கள் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *