
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம கலவிலவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
ஹோமாகம – புறக்கோட்டை பேருந்து வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்று கலவிலவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது யாரோ சிலர் திடீரென பேருந்தை இயக்கி கொண்டு செல்வதனை வரிசையில் நின்ற சாரதி ஒருவர் அவதானித்துள்ளார்.
மேலும் பேருந்தின் உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு பேருந்தைத் தேடி முச்சக்கர வண்டியில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் இடம்பெற்று 30 நிமிடங்களுக்குள் பேருந்தை திருடிய குற்றச்சாட்டில் இருவர் பேருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பேருந்தை திருடிச் செல்லும் நோக்கில் மாணவர்கள் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




