களுவாஞ்சிக்குடி பிரதேசசபையின் வரிவருமான வரி மேற்பார்வையாளர் கைது !

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசசபையின் வரிவருமான வரி மேற்பார்வையாளர் ஒருவரை கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குளுவினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச சபையில் வைத்து அவரை  கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காணி ஒன்றில் வீடு கட்டுவதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக அவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பிரதேசசபையில் கடமையாற்றிவரும் வரிவருமான வரி மேற்பார்வையாளர் கோரியதையடுத்து இது தொடர்பாக குறித்த நபர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குளுவினருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குளுவின் ஆலோசனையின் பிரகாரம் குறித்த நபர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை பகல் பிரதேசசபையில் வைத்து வரிவருமான வரி மேற்பார்வையாளருக்கு  இலஞ்சமாக 25 ஆயிரம் ரூபாவை வழங்கியபோது அங்கிருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குளுவினர் உடனடியாக செயற்பட்டு கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் எனவும் இவரை கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணையின் பின்னர் கொழும்பில் நீதிமன்றில்  முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply