கோப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய மாணிக்கம் ஜெயக்குமார் திட்டமிட்டு, கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரி எனவும், பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இவர் சண்டிலிப்பாயில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்பவராவார்.
இவ்வாறு, கடந்த செப்ரெம்பர் 28 ஆம் திகதி நடைப்பயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர், இரண்டு நாட்கள் கழித்து அவரது சடலம் நவாலி பகுதியில் உள்ள கிணறொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
எனவே, இவர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டதாகவும் இவரின் மரணத்துக்கான காரணம் கண்டு பிடிக்கப்படவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.