
நெலுவ,ஜுன் 18
சுற்றிவளைப்பு ஒன்றின் போது பொலிஸ் உத்தியோகத்தர் வசம் இருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெலுவ பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை சந்தேக நபர் பறிக்க முயன்ற போது அது இயங்கியதில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெலுவ நகரப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று (18) மாலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் மொரவக்க பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த மேலும் மூன்று சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை நெலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் காலி பிரதேசத்தில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.




