கல்வி வீழ்ச்சிக்கான காரணத்தைத் தேடாது ஆசிரியர்களின் சம்பளத்தில் கை வைப்பதிலேயே கிழக்கு நிருவாகம் குறியாக உள்ளது! பொ.உதயரூபன்

கிழக்கு மாகாணம் தற்போது கல்வியில் மிகப் பின்னடைவினை அடைந்துள்ளது. இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரோ, பிரதம செயலாளரோ, கல்விச் செயலாளரோ எவ்விதமான நடவடிக்கைகளையோ, கருத்துகளையோ குறிப்பிட முடியாத நிலையில் இருக்க ஆசிரியர்களின் சம்பளத்தில் கை வைப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் என இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண பிரதம செயலாளரால் சகல பாடசாலை அதிபர்களுக்கும் ஒரு சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கொவிட் நிதியத்திற்காக அதிபர், ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை அறவீடு செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே எனது அனுமதியின்றி எனது சம்பளத்தில் இருந்து கொவிட் நிதியத்திற்கு ஒருநாள் சம்பளம் அறவிடப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் எனது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அந்த நிதி மீள வழங்கப்பட்டது.

ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் மீள இடம்பெறும் என்பதன் காரணமாக அவ்வழக்கு அவ்வண்ணமே இருக்கத்தக்கதாக தற்போது இவ்வாறானதொரு சுற்றிநிரூபம் வெளியிடப்பட்டிருப்பதானது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடகவே கருதுகின்றேன்.

இம்மாத சம்பளத்தில் இருந்து ஒருநாள் சம்பளத்தைக் கழிப்பதற்காக ஒப்புதல் கேட்டு பல பாடசாலைகளுக்கு படிவங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

உண்மையில் இது கண்டிக்கத்தக்க விடயமாகும். உச்சநீதிமன்ற வழக்கு இருக்கத்தக்கதாக கிழக்கு மாகாண நிருவாகம் ஏன் இவ்வாறாதொரு செயற்பாட்டினை செய்கின்றார்கள்.

கிழக்கு மாகாணம் தற்போது கல்வியில் மிகப் பின்னடைவினை அடைந்துள்ளது. கடந்த வருடம் ஏழாவது இடத்தில் இருந்து தற்போது எட்டாவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

அதிலும் பெரும்பாலான கல்வி வலயங்கள் மிக மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருக்கின்றன.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரோ, பிரதம செயலாளரோ, கல்விச் செயலாளரோ எவ்விதமான நடவடிக்கைகளையோ, கருத்துகளையோ குறிப்பிட முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

அதிலும் அளவுக்கதிகமான ஆசிரியார்கள் நிரம்பியுள்ள கல்வி வலயங்களே இவ்வாறாக மிகவும் பின்னடைவினைக் கண்டுள்ளது.

இந்த நிலையில் இவர்கள் அதிபர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்கை கழிப்பதற்கான ஆர்வத்தில் இருக்கின்றார்கள்.

பெரும்பாலாள அதிபர்கள் ஆசியர்களின் விரும்பம் இல்லாமலேயே இவ் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அனுப்பி பல ஆசிரியர்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருநாள் சம்பளம் கழிக்கப்பட்டும் இருக்கின்றது.

அதிபர் ஆசிரியர்களின் சம்பளங்களில் கழிப்பினை மேற்கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டககளப்பு, பட்டிருப்பு கல்வி வலயங்களே அதிக அக்கறை செலுத்துகின்றன.

அதேவேளை தற்போது வெளியாகியுள்ள சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றில் மிகவும் பின்டைவாக உள்ள வலயக் கல்வி பரிவுகளும் இவையாகவே இருக்கின்றது. இதிலிருந்து இங்குள்ள கல்வி அதிகாரிகள் யார் சார்பாக இருக்கின்றார்கள், எவர் சார்பாக நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கின்றார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.

எனவே கல்வி அதிகாரிகள் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு கல்வியை அபிவிருத்தி செய்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

இதேவேளை தொழிற்சங்க ரீதியில் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பில் அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய குழுவினருடான சந்திப்பில் முறைப்பாடொன்றினை சமர்ப்பித்திருக்கின்றோம்.

அத்துடன், நாளைய ஆசிரியர் தினத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எமது போராட்டத்தினை நடாத்தத் தீர்மானித்திருக்கின்றோம். இதற்கு அதிபர்களும், ஆசிரியர்களும் ஒன்றிணையுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply