
கொழும்பு,ஜுன் 19
தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துவெளியிட்ட அவர், எதிர்வரும் 23ஆம் திகதி பெற்றோல் கப்பலொன்றையும் 24ஆம் திகதி டீசல் கப்பலொன்றையும் நாட்டுக்கு வரவழைப்பதற்கு நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 3 நாட்களுக்கு (ஜூன் 20, 21, 22) எரிபொருள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 40,000 மெட்ரிக் டன் டீசல், 4,000 மெட்ரிக் டன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 8,300 மெட்ரிக் டன் 95 ஒக்டேன் பெற்றோல் உள்ளதாக அவர் கூறினார்.
லங்கா ஐஓசி வசம் 10,000 மெட்ரிக் டன் பெற்றோல் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றோலை விநியோகிக்கப்படும் எனவும் மேலும் லங்கா ஐஓசி தனது பெற்றோல் இருப்புக்களை சந்தைக்கு வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து, பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்துமாறும், பொது மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் எரிபொருளை அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பேருந்து சாரதிகள் வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வதனை தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளுக்கு இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் திகதிகளை ஒதுக்கி எரிபொருள் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மருத்துவ குழுக்கள் மற்றும் காவல்துறை வாகனங்களுக்கு அடுத்த வாரம் முதல் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பிலான நிலைமையையும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி வரை போதியளவு மசகு எண்ணெய் கையிருப்பு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மசகு எண்ணெய்யுடனான கப்பல்கள் எதிர்வரும் 29, ஜூலை 10 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாட்டை வந்தடையும் என்று அமைச்சர் கூறினார்.

