
பிரான்ஸ், ஜுன் 20
பிரான்ஸில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் கட்சிக் கூட்டணி பின்னடைவை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளது.
பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலின் 2 ஆவது சுற்று நேற்று நடைபெற்றது.
இன்று திங்கட்கிழமை கலை வெளியான பெறுபேறுகளின்படி, ஜனாதிபதி மெக்ரோனின் என்சாபிள் கட்சிக் கூட்டணி 247 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இத்தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற கட்சியாக அது உள்ளபோதிலும் பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளது.
577 ஆசனங்களைக் கொண்ட பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 289 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தடவை இக்கூட்டணி 347 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இக்கூட்டணி கடந்த தடவையைவிட 100 ஆசனங்கள் குறைவாக பெற்றுள்ளது.
இடதுசாரி கட்சிகள் மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகள் கடந்த தடவையைவிட அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளன. 44 வயதான ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி, பெற்று 2 மாதங்களில் அவரின் கட்சி இவ்வாறு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஜேன் லூக் மெலேசன்சன் தலைமையிலான இடது சாரி கட்சியான இம்முறை 142 ஆசனங்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகிறது. அக்கட்சி கடந்த தடவையைவிட 82 ஆசனங்களை அதிகமாக பெற்றுள்ளது. அதேவேளை, வலதுசாரி தலைவர் மெரைன் லே பென்னின் தேசிய பேரணி கட்சி 89 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இக்கட்சி கடந்த தடவை 8 ஆசனங்களையே பெற்றிருந்தது.

