உணர்ச்சியற்ற ஜடங்களாக உள்ள கோட்டா அரசை விரட்டியடிக்க மக்கள் ஓரணியில் திரள வேண்டும்! ஜே.வி.பி.

காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

சமகால நிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வரவில்லை. பிரச்சினையை வளர்ப்பதற்காகவே வந்துள்ளார். வரிசை யுகமே தற்போது காணப்படுகிறது. உரம் இல்லாததால் விவசாயத்துறை முழுமையாக
செயலிழந்துள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக தட்டுப்பாட்டினாலும் மக்கள் பட்டினிச் சாவினை எதிர்கொள்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு வழங்காமல் மக்களின் பாதுகாவலன் என்ற சொல்லிக்கொண்டு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ராஜபக்ஷவின் பாதுகாவலனாக மாறியுள்ளார்.

எரிபொருளினை பெறுவதற்காக மக்கள் வரிசையில் நின்று தங்களின் வாழ்க்கையின் நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையானது எமது நாட்டினை மீண்டும் மீண்டும் கடன் பொறியில் சிக்க வைக்கின்ற நடவடிக்கையாக உள்ளது.

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் எமது நாட்டினை தாரை வார்த்துக்கொடுக்கின்ற நபர்களாகவும் கோட்டாபாயவும், ரணிலும் மாறியுள்ளார்கள். நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகர்த்தாவாக விளங்குவது இந்த 74 ஆண்டுகளாக சாபக்கேடுகளுக்குள்ளான இந்த அரசாங்கங்களாலாகும் என்பதனை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

இனிவரும் கலங்களில் இதற்போதைய நிலையை விட மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். இதனால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகலாம், பொலிஸ், இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரிக்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன, இதிலிருந்து எவன் வந்தாலும் எமது நாட்டினை மீட்டெடுக்க முடியாத நிலைக்கு இந்த அரசங்கம் தள்ளியிருக்கிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது, பாடசாலைகளை இழுத்து மூடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது, கடந்த இரண்டு வருட காலங்களிலிருந்து மாணவர்கள் கல்வியினை ஒழுங்காக கற்க முடியாத நிலையினை தொடர்ந்து நாசமாக்குகின்ற நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாத உணர்ச்சியற்ற ஜடங்களாக உள்ள கோட்டாபய அரசாங்கத்தை விரட்டியடிக்க இலங்கையில் உள்ள மக்கள் ஓரணியில் திரள வேண்டும்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *