டீசல் வழங்குமாறுக் கோரி கிளிநொச்சியில் தனியார் பேருந்து சேவையினர் போராட்டம்!

டீசல் வழங்குமாறு கோரி கிளிநொச்சி அரச பேருந்து சாலையை தனியார் பேருந்து சேவையினர் முற்றுகையிட்டனர்.

இன்று முற்பகல் அரச பேருந்து சாலையின் பிரதான வீதியை மூடி தனியார் பேருந்துரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன் போது இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்து கலந்துரையாடி சுமுகமான நிலைக்கு கொண்டுவந்தனர்.

தனியார் பேருந்து சேவையினர் சேவைக்கு தேவையான எரிபொருளை அரச பேருந்து சாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்த நிலையில், எரிபொருளை கிளிநொச்சி சாலையினர் வழங்குவதில்லை என தனியார் பேருந்து சேவையினர் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமது சேவையை முன்னெடுக்க எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்றால், அங்கு டீசல் தர மறுப்பதாகவும், அரச பேருந்து சாலைகளில் பெறுமாறு தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை தமக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கிடைப்பதாகவும், அதில் தனியார் சேவையினருக்கு வழங்க முடியாதுள்ளதாக அரச பேருந்து சாலையினர் தெரிவிக்கின்றனர்.

இரு தரப்புடனும் பேசிய பொலிசார், தனியார் பேருந்துகளை தனி வரிசைக்குட்படுத்துமாறும், ஏனைய வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் போது 10 வாகனங்களுக்கு பின் ஒரு பேருந்து எனும் அடிப்படையில் எரிபொருளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் நிலைமை சுமுகமடைந்தது.

ஏனைய பிரதேசங்களில் அமைச்சின் முடிவுக்கமைவாக அரச பேருந்து சாலைகளில் டீசல் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில் மாத்திரம் மாறுபட்ட நிலை காணப்படுவது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *