கடிதம் மூலம் ஜீவன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்; காஞ்சன விஜயசேகரவின் பதில்!

தோட்டத் தொழிலாளர்கள் மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பிரச்சினை குறித்து உங்கள் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னால் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவின் கவனத்துக்கு கொண்டுவந்து கடிதம் ஒன்றை ஜூன் ஆம் திகதி ஜீவன் தொண்டமான் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,

“எமது மக்கள் தமது அன்றாட பாவனைக்கு மண்ணெண்ணையை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சமையல் எரிவாயுவின் அளவும் தற்போது நாட்டில் குறைந்தளவில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் எமது தோட்டத் தொழிலாளர்கள் மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பிரச்சினை குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

எமது மலையக தோட்ட தொழிலாளர் மக்கள் தினசரி வாழ்வாதாரத்திற்கு தோட்ட தேயிலை மலைகளில் கிடைக்கும் தொழிலில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். அதேவேளை இவர்கள் தமது அன்றாட வீட்டு தேவைகளுக்கு மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன்களை பயன்படுத்துகின்றனர்.

இன்று நாட்டில் இவை இரண்டுக்கும் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டில் இவர்கள் பாதிக்கப்படுவதுடன், பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவ்வப்போது கிடைக்கும் மண்ணெண்ணைக்கும்,முகவர் நிலையங்களில் கிடைக்கும் சமையல் எரிவாயுக்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

தமது அன்றாட தொழிலில் கிடைக்கும் ஒரு நாள் அல்லது அதற்கு மேலாக வருமானத்தை இழந்து இடப்பட்டுள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பது எமது மக்களுக்கு சிறமத்தையளிக்கின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலைமை காரணமாக மக்களிடையே தற்போது வெறுப்பும், கோபமும் வலுப்பெற்று அவர்கள் எரிபொருள் வழங்குனர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தூண்டப்படுகின்றார்கள்.

எனவே இந்த நிலைமையை கருத்திற்கொண்டு பெருந்தோட்டப்புற பிரதேசங்களுக்கு வழங்கப்படும் எரிபொருட்களின் அளவை அதிகரித்து அந்நிய செலாவனியை ஈட்டித்தரும் எமது மக்களின் தேவைகளை இடையூறுகள் இன்றி வழங்க அமைச்சர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எமது மக்களை விசேட பார்வையில் வைத்து தொடர்ச்சியாக மண்ணெண்ணை மற்றும்சமையல் எரிவாயு கொள்கலன்களை வழங்க விசேட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உதவுமாரு கேட்டுக்கொள்கின்றேன்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானின் கடிதத்திற்கு கவனம் செலுத்தப்பட்டு அவர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர பதில் வழங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *