கற்றல் செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

கொழும்பு,ஜுன் 20

சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரிய, அதிபர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இந்த வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதான நகரங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சகல மாகாணங்களினதும் கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சில பாடசாலைகளில் சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு வலய கல்வி பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் குறித்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் இன்றைய தினம் பல பகுதிகளில் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தகவல்கள் கிடைக்கப்பெறாமையால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தநிலையில் சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

அவ்வாறு இடம்பெறாவிட்டால் அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலகியுள்ளனர்.

ஆசிரியர்கள் உரிய வகையில்  விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *