தென்கொரியாவில் 18 மணிநேரம் வேலையின் பின் உயிரிழந்த இலங்கை பிரஜை

தென்கொரியாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் பணி புரிந்த இலங்கைப் பிரஜையொருவர் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை செய்த பின்னர் தொழில்துறை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கில் அமைந்துள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ‘த கொரியா டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 33 வயதான தொழிலாளி ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில் ஹ்வாசோங் நகரத்தின் பால்டன் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் இறந்துள்ளதாக ஹுவாசோங் சியோபு பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

அவர் எண்ணெய் அழுத்த அமுக்கியில் சிக்கியதன் விளைாவகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தின்போது அருகிலேயே வேறு இரு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருந்தனர், ஆனால் பாதிக்கப்பட்டவர் அலறுவதைக் கேட்கும் வரை அவர்கள் விபத்து பற்றி அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர்.

சில எண்ணெய் அழுத்த வாயுவை வைத்திருந்த கம்ப்ரசர் திடீரென இயங்கத் தொடங்கியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஒரு புதிய தொழிலாளி எனவும் அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொழிற்சாலையில் சேர்ந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கொரிய தொழிற்சாலை மேலாளர் விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இரவு 11 மணிக்கு தொழிற்சாலையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சாலையில் பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு காட்சிகளை பகுப்பாய்வு செய்வது உட்பட, விசாரணையின் பின்னர் எந்த வகையான முறைகேடுகள் காணப்படுகின்றன என்பதன் அடிப்படையில் தொழிற்சாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *