ஆர்ப்பாட்டத்துக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை!

எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக மக்களை ஒன்று திரட்டும் பட்சத்தில் மீண்டும் கொரோனா பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என நாம் கூறவில்லை. எதிர்ப்பு நடவடிக்கை என்ற அடிப்படையில், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றே நாங்கள் கூறுகின்றோம். எதிர்ப்பை வெளியிடுவதற்கான வேறு முறைமைகள் குறித்து தங்களுக்கு பிரச்சினை இல்லை.

பொதுமக்கள் ஒன்று கூடுவார்களாயின், அது நாட்டு மக்களையே ஆபத்திற்குள் தள்ளுவதற்காக திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவே அர்த்தப்படுத்தவேண்டி ஏற்படுவதாகும்.

இதேவேளை, தற்போதுள்ள நிலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவிக்கையில்,

அடுத்த ஒருசில வாரங்களில் தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கருதுவதாகவும், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில், கருத்து தெரிவித்த வைத்தியர் நளிந்த ஹேரத், கொடுப்பனவுகளை அதிகரிப்பவர்கள் அதிகரித்துக்கொள்வார்கள். ஒன்றரை வருடம் சிரமப்பட்டு கொரோனாத் தொற்று பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதனால், நாடு ஐந்தாவது அலைக்கு பயணிக்காமல் பொது மக்களே பார்த்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply