
கொழும்பு,ஜுன் 21
ஒரு வாரத்திற்கு மாத்திரம் சபை அமர்வை புறக்கணிப்பது உசிதமான தீர்மானமாக தாம் கருதவில்லை என அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் அறிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வினை அடைய போகிறோம் என்ற திட்ட வரைவை பிரதமர் முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், சபை அமர்வில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, நாட்டின் பிரச்சினைக்கு தீர்வினை காண தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சிக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பை வழங்கவில்லை என குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்களை பொறுப்புடன் முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில், நாளைய தினம் ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்ற அமர்வானது எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

