
சென்னை, ஜுன் 22
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வாரம் வெளியாகும் மாமனிதன் திரைப்படத்தை சுமார் 400 திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி – இயக்குநர் சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். அத்துடன் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து படத்திற்கான இசையும் அமைத்துள்ளார்.
மாமனிதன் திரைப்படத்தின் வேலைகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டன. ஆனால் யுவன்சங்கர் ராஜாவுக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் மாமனிதன் திரைப்படத்தை ஆர்.கே சுரேஷ் வெளியிட முன்வந்தார். மேலும் மே மாதம் 20ஆம் திகதி படத்தை வெளியிட திட்டமிட்டார். ஆனால் அந்த சமயத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வந்தது. அத்துடன் டான், நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்களும் வெளியாகின. இதனால் மாமனிதன் படத்தின் வெளியீட்டை ஜூன் மாதத்திற்கு ஆர்.கே சுரேஷ் ஒத்திவைத்தார்.
குறைந்தபட்சம் 400 திரையரங்குகளில் வெளியிட வேண்டும் எனவும் திட்டமிட்டார். அதன்படி தற்போது மாமனிதன் திரைப்படத்தை எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. அதேசமயம் தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகளில் ஆர்.கே. சுரேஷ் இறங்கியுள்ளார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், மாமனிதன் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல் விஜய் சேதுபதி – சீனுராமசாமி – ஆர்.கே. சுரேஷ் கூட்டணியில் வெளியான தர்மதுரை திரைப்படமும் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. இதனால் மாமனிதன் திரைப்படமும் நிச்சயம் வெற்றியடையும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.