
மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்து இந்த வார நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியும் இதனை தெரிவித்துள்ளன.
அதன்படி தற்போதைய நிலையில் இருந்து வெளிவருவதற்கான தெளிவான மீட்புத் திட்டத்தை அரசாங்கம் வழங்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.
அரசாங்கம் தமது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பெருமளவிலான பணத்தை தொடர்ந்து மோசடி செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
எவ்வாறாயினும் நாடாளுமன்றத்திற்குள் பொது மக்களின் அவலத்தை எடுத்துரைக்க மக்களின் குரலாக பிரதிநிதித்துவப்படுத்துவோம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல துறைகள் வீழ்ச்சியடைந்தமையால் ஏற்பட்ட தாக்கங்களை குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்க, தனது அடிப்படைப் பொறுப்பை ஜனாதிபதி புறக்கணித்ததன் விளைவே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் 52 நாள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை போலவே ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.