தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க முடியாதவர்கள் மனித உரிமை பற்றிப் பேசுகிறார்கள்! – அங்கஜன் தெரிவிப்பு

யுத்தம் முடிவடைந்த பின்னரும் தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எமது மக்களின் குறைகளைத் தீர்க்காமல் சிலர் மனித உரிமைகளை பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய அங்கஜன் இரமநாதன் குற்றஞ்சாட்டினார்.

யாழ். தீவகத்தில் இடம்பெற்ற கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை இன்று புதன்கிழமை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்கள் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்தும் தொடர்ச்சியாக தண்ணீர் தாகத்தால் அவதிப்படுகிறார்கள்.

ஜனாதிபதி கோட்டபாய தனது தேர்தல் பிரசாரத்தில் நாடு முழுவதும் சுத்தமான குடிநீரை வழங்குவேன் என சூளுரைத்த நிலையில், அதனை நிறைவேற்றும் முகமாக பிரதமரின் பணிப்புரைக்கமைய வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

தாளையடியில் இருந்து கடல் நீரை நன்னீராக்கி யாழ்ப்பாண மக்களின் குடிரை வழங்கல், தீவக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நயினாதீவில் கடல்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஆரம்பித்தமை மற்றும் யாழ். மாநகர பகுதிகளில் குழாய் நீர் பொருத்துதல் ஆகிய திட்டங்கள் நனவாகும் நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கிறோம்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் தடுத்திருந்த நிலையில் தாளையடி இத் திட்டத்தைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை.

தற்போதைய அரசாங்கம் கடந்தகால அரசாங்கங்களை போல அல்லாமல் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் மக்களுக்கான அபிவிருத்திகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

ஆகவே, சிலர் அரசியலில் பகல் கனவு காணக் கூடும். அதைப்பற்றி எமக்கு பிரச்சினை அல்ல மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் தருணம் அதுவே என் கனவு யாழ் என அவர்; மேலும் தெரிவித்தார்.

Leave a Reply