கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், அவர்கள் நால்வரும் கற்பிட்டி மற்றும் புத்தளம் தள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் ஏற்பட்ட பிரச்சினையே மேற்படி கைகலப்பிற்கு காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைகலப்பில் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் இருவர் புத்தளம் தள வைத்தியசாலையிலும், மேலும் இருவர் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மதுரங்குளி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலும் பெற்றோல் கொள்வனவுக்காக வந்தவர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
வரிசையில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒக்சன் 95 விநியோகிக்கப்பட்ட நிலையில், அரச உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என வெவ்வேறு வகையான வரிசையில் காத்துநின்றனர்.
இதன்போதே அங்கு வருகை தந்த சிலரால் ஏற்பட்ட வரிசை பிரச்சினை காரணமாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை பொறுமையோடு செயற்படுமாறும், பெற்றோல் போதிய அளவு கையிருப்பில் உள்ளது எனவும் , அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், மேற்படி பெற்றோல் கொள்வனவுக்காக வருகை தந்த வாகனங்களை வரிசைப்படுத்தும் பொறுப்பை பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரிடம் ஒப்படைத்தமையை அடுத்து, நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாவுக்கும், முச்சக்கர வண்டி ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாவுக்கும் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

