சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட அரச அதிபருமல மற்றும் மாவட்ட செயலாளருமான B.எச்.என். ஜயவிக்ரம வேண்டிக் கொண்டார்.
மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் கூட்டம் இன்று (22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிரதேச செயலக ரீதியாக சிறுவர்களது நலன்கள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.
சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படல் தொடர்பான சம்பவங்கள் மாவட்டத்தில் பதிவாகின்றன.
இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக இல்லாதொழி க்கும் வகையில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படல் இன்றியமையாதது.
சிறுவர்கள் வாழ்வதற்குரிய நல்ல ஓர் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அதன் மூலம் அவர்களை நாட்டுக்கு வேண்டிய பிரஜைகளாக மாற்றியமைக்க முடியும் – என்றார்.
திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்ட 430 மாணவர்கள் காணப்படுகின்றனர்.
இவர்களை மீளப் பாடசாலைகளில் இணைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் பல சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்கள், இளவயதுத் திருமணங்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், போதைப்பொருள் பாவனை, வீட்டு வன்முறை, பிள்ளைகளை சுமந்த வண்ணம் யாசகமெடுத்தல், சிறுவர் போஷாக்கு, விஷேட தேவையுடையவர்களின் நலன்சார் விடயங்கள், சிறுவர் கல்வி, சிறுவர் சுகதாரம் உட்பட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
சிறுவர்களோடு தொடர்புப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தனித்தனியாக செயற்படுவதனை விடக் கூட்டாக ஒருங்கிணைந்து நீண்டகால, குறுங்கால திட்டங்களை வடிவமைத்து செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன் போது அரச அதிபர் வலியுறுத்தினார்.
அத்துடன் சிறுவர்களுக்குரிய விடயங்களுடன் தொடர்பான தெளிவூட்டல்களை வலயக்கல்வி பணிமனையுடன் இணைந்து எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


பிற செய்திகள்

