கடன் பெற்றுக்கொள்ள வேறு வழிகள் இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள்: பிரதமர்

கொழும்பு,ஜுன் 22

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே இப்போது எம்முன் உள்ள ஒரே பாதுகாப்பான தெரிவாகும்.  சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாடு இல்லாமல் எந்த நாடும் எமக்கு கடன் வழங்கப்போவதில்லை.

அதனால் நாங்கள் ஆரம்பமாக அந்த உறுதிப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் கடன் பெற்றுக்கொள்ள வேறு வழிகள் இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள்.  அரசாங்கத்துக்கு இந்த வழி மாத்திரமே தெரியும். வேறு எந்த வழியும் தெரியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று  (22) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, நாடு எதிர்நோக்கும் உண்மையான நிலைமை மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்கு நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.  இதை சிலர் கிண்டல் செய்துள்ளனர்.  “நாடு எதிர்கொள்ளும் கஷ்டங்களை எங்களிடம் கூறுவதற்காகவே அவர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டாரா?” என்று என்னை விமர்சிக்கிறார்கள்.

எவ்வாறாயினும், நாங்கள் அவர்களிடம் முழு உண்மையையும் கூறுகிறோம் என்பதற்காக இன்னும் பலர் நன்றியுள்ளவர்களாக உள்ளனர், மேலும் இந்த சிக்கல்களை சமாளிக்க எங்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை முன்வைக்க அவர்கள் முன்வந்துள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *