அரசின் நடவடிக்கைகள் மனித உரிமைசார் நெருக்கடியை தீவிரப்படுத்தக்கூடும்! – சர்வதேச மன்னிப்புச் சபை

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள், பெருளாதார மற்றும் மனித உரிமைகள்சார் நெருக்கடிகள் மேலும் தீவிரமடைவதற்கு வழிவகுக்கக்கூடும் என்று கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கை ஏற்கனவே இணங்கியிருக்கும் சர்வதேசக் கடப்பாடுகளின் பிரகாரம் பொருளாதார நெருக்கடி காணப்பட்டாலும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதும், அவற்றைப் பாதுகாப்பதும் இன்றியமையாததாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கரிசனையை வெளிக்காட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அரசாங்கம் கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும் உரியவாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் பொருளாதார மற்றும் மனித உரிமைசார் நெருக்கடிகள் மேலும் தீவிரமடைவதற்கு வழிவகுக்கக்கூடும் என்று நாம் கரிசனைகொள்கின்றோம்.

எனவே மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடுகளை இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகின்றோம்.

பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனம் உள்ளடங்கலாகக் குறிப்பிடத்தக்களவிலான கடப்பாடுகளுக்கு இலங்கை இணங்கியிருக்கின்றது.

எனவே இலங்கையின் அனைத்துப்பிரஜைகளினதும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன், அவற்றைப் பாதுகாக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். பொருளாதார நெருக்கடியின்போதும் இதனைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளின்போது, அதில் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான அவசர சமூகப்பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளடக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும்.

அதுமாத்திரமன்றி வரவு, செலவுத்திட்டம் மற்றும் செலவினங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களின்போது அவற்றில் மக்கள் கலந்துகொள்வதுடன், தமது செயற்திறனான பங்களிப்பையும் வழங்குவதற்கு அவசியமான செயற்திட்டமொன்றையும் வகுக்கவேண்டும்.

அத்தோடு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையும் தற்காலிகமானதும், சட்டபூர்வமானதும், அத்தியாவசியமானதும், நியாயமானதுமாக இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதுடன் அவை உரியவாறான மதிப்பீடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

மேலும் கடன் மீள்செலுத்துகை உள்ளடங்கலாக கடன் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் எதிர்காலக்கடப்பாடுகள், மனித உரிமைகளை தொடர்பில் கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான இயலுமையைப் பாதிக்கும் வகையில் அமையாதிருப்பதையும் அரசாங்கம் உறுதிசெய்யவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *