மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் உணரும் நேரத்தில், சமையல் எரிவாயு பற்றாக்குறைக்கு எவ்விதத் தீர்வையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தும் அரசாங்கம் அது தொடர்பில் எவ்விதப் பதிலையும் தெரிவிக்கவில்லை என்றார்.
பியகம நகரில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே,
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இதனால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் சமையல் எரிவாயு நுகர்வில் 30 சதவீதம் லாப் நிறுவனவே
விநியோகிக்கின்றது.
டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாலும் உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாலும் எரிவாயு விநியோகத்திலிருந்து லாப் நிறுவனம் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
எனினும், லாப் நிறுவனத்தை, அரசாங்கத்தின் நிறுவனமான லிட்ரோவின் கீழ் கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் அது இன்னும் செயற்படுத்தப்படவில்லை என்றார்.
மஞ்சள்நிற சிலிண்டருக்கு நீல நிற சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள முடியுமென, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கூறினாலும் வண்ண வண்ணக் கதைகள் யதார்த்தமாகாது என்பதை நுகர்வோர் சிலிண்டர்களுடன் கடைகளுக்குச் செல்லும் போதே புரிந்துகொள்கின்றனர் என்றார்.
சமையல் எரிவாயு நிறுவனத்தினர், ஊடகங்கள் முன்பாக எதைக் கூறினாலும், தமது நிறுவனம் மஞ்சள் நிற சிலிண்டர்களுக்கு நீல நிற சிலிண்டர்களை வழங்குமாறு தம்மிடம் தெரிவிக்கவில்லை என, சமையல் எரிவாயு விற்பனைப் பிரதிநிதிகள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் இன்று நுகர்வோருக்கு சமையல் எரிவாயு
இல்லை. அதேப்போல் பலர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.
எனவே, அரசாங்கம் எந்தவோர் உரிய வேலைத்திட்டமும் இன்றிச் செயற்படுகின்றமை
தெளிவாகின்றது என்றார்.