எரிபொருள் நிலையத்தில் தரக்குறைவாக ஏசியதால் பெண் பதிலதிபர் போராட்டம்! 

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச அலுவலர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் எரிபொருள் பெற வந்த பதிலதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன்  நேற்றுக் காலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறித்த எரிபொருள் நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு இன்று எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் நிலைய ஊழியர்களால்  அறிவுறுத்தப்பட்டது. இதன்போது எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலர், அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாகப் பேசியுள்ளனர்.
இந்த நிலையில்  கடமைக்குச் செல்ல எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதிலதிபரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடமைக்குச் செல்லாவிட்டால் விடுமுறையாக்கப்படுகிறது. கடமைக்குச் செல்ல வந்த என்னைத் தரக்குறைவாக பேசுகின்றனர். கல்வி வேண்டாம், பெற்றோலே வேண்டும் என்கின்றனர். ஆசிரியர்கள் என்றால் தரக்குறைவானவர்கள் இல்லை. உங்கள் பிள்ளைகளுக்கே நாம் கல்வியைப் புகட்டுகின்றோம்.
இவ்வாறு சென்றால் பிள்ளைகள் முதல் எழுத்து கூட அறியாதவர்களாக வளர்வார்கள். எங்களுக்கு முறையான எரிபொருள் கிடைக்க வேண்டும்.

இல்லையேல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. நாகரிகமின்றி தரக்குறைவாக பேசுமளவுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதற்கு நியாயமான தீர்வு வேண்டும். அதுவரை ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாது போராட வேண்டும். இது தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்துக்கு அறிவித்துள்ளேன். நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும். எமது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொதுமக்கள் சிலர், பதிலதிபருடன் கலந்துரையாடி போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியிருந்தனர். இதனையடுத்து  இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் எனக் கூறி போராட்டம் கைவிடப்பட்டதுடன், பதிலதிபர் பாடசாலைக் கடமைக்குச் செல்வதற்கு எரிபொருள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *