
அவிசாவளை,ஜுன் 24
கஞ்சா விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தனது கணவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யாதிருப்பதற்காக அவிசாவளை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை இலஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவினரே கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மிகச் சூட்சுமான முறையில் அவரைக் கைது செய்தனர்.
சந்தேக நபரைக் கைது செய்யும் அவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்துள்ளார். இதன்போது அவரிடமிருந்த கஞ்சா விற்பனை மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் 27,000 ரூபா பணமும் ஒரு தொகை கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே அவரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்யாதிருப்பதற்காக அவரது மனைவி அவிசாவளை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார்.

