இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட துாதுக்குழுவினர் நேற்று (23) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த துாதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் பொருளாதார விவகாரங்களுக்கான திணைக்களத்தின் செயலாளர் ஶ்ரீ அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் இந்து சமுத்திர பிராந்தியத்துக்கான இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைக்கமைய ‘அயலுறவுக்கு முதலிடம் கொள்கை’ வழிகாட்டலின் அடிப்படையிலேயே இலங்கை மக்களுக்கான 3.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான ரீதியிலான உதவி அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இந்திய இலங்கை இருதரப்பு உறவுகளின் அபிவிருத்திக்கான அவரது அர்ப்பணிப்பிற்காக இந்திய தரப்பினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரதமருடன் இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்தும் பொருளாதார மீட்சிக்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் இரு தரப்பினரிடையிலும் இடம்பெற்றுள்ளன.
இதன்போது உட்கட்டமைப்பு, தொடர்பாடல்கள், புதுப்பிக்கத்தக்க சக்தி, மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுவாக்கல் உள்ளிட்ட விடயங்கள், முதலீட்டு பங்குடைமையை மேம்படுத்தலின் முக்கியத்துவம் குறித்தும் இந்த சந்திப்பில் இருதரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் பயங்கரவாத ஒழிப்பு, கடல் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், மனிதாபிமான உதவி, அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தக ரீதியான உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட விடயங்களில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் வழங்கப்பட்டுவரும் உறுதியான ஆதரவை இலங்கை தரப்பினர் சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்

