இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தமக்கு உரிய ஒழுங்கில் டீசல் வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். பருத்தித்துறை பஸ் நிலையத்திலிருந்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை தமது பஸ்களை தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பஸ்களுக்கும் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் எமக்கு உரிய ஒழுங்கு முறைகளில் பருத்தித்துறை எரிபொருள் நிலைய முகாமையாளர் டீசலை விநியோகிக்கவில்லை.
இதேவேளை இரவு நேரங்களில் கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்கு பெருமளவான டீசல் வழங்கப்படுகின்றது என்று தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.இதனையடுத்து பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி, பருத்தித்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடமராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் வடபிராந்திய சாலை முகாமையாளரை அழைத்து கலந்துரையாடினர். இதன்போது 750 இலக்க வழித்தடத்தில் நாளாந்தம் சேவையில் ஈடுபடும் 25 பஸ்களுக்கும் நாளாந்தம் 750 லீற்றர் டீசல் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அதன் பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.

