
தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனத்தினருக்கு வட மாகாண கல்வி அமைச்சு அனுமதியளிக்கின்றதா ? என ஆசிரிய சங்க உப தலைவர் திலீபன் திலீஸ் கேள்வி எழுப்பியுள்ளார் .
இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறாக கேள்வி எழுப்பியுள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ;
ஆரம்ப கலங்களில் வெளிக்கள ஆய்விற்காக உருவாக்கப்பட்ட தொண்டமானாறு வெளிக்கள திணைக்களமானது காத்திரமான பங்களிப்பினை செய்து வந்தது .இது தற்போது தனியார் மயப்படுத்தப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கின்ற நிறுவனமாகும் .இதன் காப்பாளராக வட மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளார் . .ஆனால் தற்போது இது வியாபார ஸ்தாபனமாக இயங்கிக்கொண்டிருக்கிறது .
இலங்கையின் கல்வி முறை இலவச கல்வி முறையாக இருக்கின்ற பொழுது ஒரு தனியார் நிறுவன கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பிற்கு எவ்வாறு கல்வி பணிப்பாளர் காப்பாளராக இருக்க முடியும் என்பது ஓர் முக்கியமான கேள்வியாகும்.
உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை நடாத்துகையில் விரும்பிய மாணவர்கள் மாத்திரம் கட்டணம் செலுத்தி தோற்றக்கூடிய நிலை உள்ளது, இதனை வட மாகாண கல்வித் திணைக்களம் ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது .சாதாரண மாணவர்கள் இதில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு மறுக்கப்படுகிறது .
எனவே இலவச கல்வி முறையிலே எவ்வாறு தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனத்தினுடைய வினாத்தாள்களை வசதி உள்ளவர்கள் பெற்றுக்கொள்கின்ற வகையில் அனுமதிக்கிறார்கள் ?யார் இதனை அனுமதித்தது ?
இந்த பரீடசைக்கு பாடசாலை ஆசிரியர்கள் எதற்கு பங்களிப்பு செய்கிறார்கள் ?இதற்க்காக கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறதா ? மாணவர்களால் வழங்கப்படுகின்ற நிதிகள் எங்கு செல்கின்றது? தனியார் கட்டமைப்பு கட்டி வளர்ப்பதற்காக வட மாகாண கல்வி அமைச்சு உகந்தையாக செயற்படுகிறதா ? இதனால் எவ்வளவு கோடி வருமானம் வருகிறது.
இதனை கல்வி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற கணக்காய்வினை முன்வைக்க முடியுமா ?என்ற சவாலினையும் முன்வைக்கின்றேன் .
பொது விடைத்தாள் திருத்தத்திற்கு இடத்தினையும் ஆசிரியர்களையும் ஒதுக்கீடு செய்வதற்கு வட மாகாண கல்வி அமைச்சு அனுமத்திக்கின்றது ,இது முறையற்ற செயற்பாடுகளாகும் .
எனவே இது நிறுத்தப்பட வேண்டும் ,சனிக்கிழமைகளிலும் மாலை நேரங்களிலும் ஆசிரியர்களை பயன்படுத்துவதனை முற்றாக எதிர்க்கின்றோம் . இது தொடர்ச்சியாக இடம்பெற்றால் எதிர்ப்பு சார்ந்த நடவடிக்கைகளினை வெளிப்படுத்தும் வகையில் தொழிற்சங்க ரீதியில் நடவடிக்கையினை முன்னெடுப்போம் .
மேலும் எத்துறையினருக்கும் ஒரு பொறிமுறையின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவில்லை ,இதனை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடி காணப்படுகிறது .ஆசிரியர்களுக்கு எரிபொருள் கிடைத்தால் மாத்திரமே தொடர்ச்சியாக பணியாற்ற முடியும் .ஆசிரியர்கள் அவமானப்படுத்தப்படுவதற்கும் பொறுப்பான அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளாகும் .என்றார் .
பிற செய்திகள்

