சிறுமியின் சடலத்தை தோண்டி, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் டயகம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி அண்மையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சிறுமியின் சடலத்தை தோண்டி, பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு நுவரெலியா நீதவான் லுஷாகா குமாரி தர்மகீர்த்தி இன்று (29) உத்தரவிட்டார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, டயகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை நாளை (30) காலை 8.30-க்கு தோண்டுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஹங்ச அபேரத்ன, பீ அறிக்கையை சமர்ப்பித்து முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, கொழும்பு தெற்கு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

டயகம சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்கான மூவரடங்கிய விசேட நிபுணர் குழு நேற்று பெயரிடப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தலைவரும், விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி உயிரிழந்த விதம், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா, அவ்வாறு ஏற்பட்டிருப்பின் எந்த காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது, ஏனைய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளாரா உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மூவரடங்கிய விசேட நிபுணர் குழுவிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *